தமிழ் சினிமாவில் மௌனராகம், தளபதி, ரோஜா போன்ற காலத்தால் அழிக்க முடியாத சில படைப்புகளை வழங்கிய முக்கிய இயக்குனர்தான் மணிரத்னம். இவரது படங்கள் அனைத்தும் தமிழ் திரை உலக வரலாற்றில் தவிர்க்கமுடியாத இடங்களை பெற்றுள்ளன. சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் மணிரத்னம் டாப் இடத்தை பிடித்துள்ளார்.

தற்போது மணிரத்னம் அவரது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். பிரபல எழுத்தாளர் கல்கியின் கைவண்ணத்தில் எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவாகும் இப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி வருகிறது. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தைப் போலவே இரண்டு பாகங்களாக உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படம் தமிழ் சினிமாவில் முக்கிய படமாக பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு முடிய உள்ள நிலையில் படத்திற்கு புதிதாக சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது.

தற்போது பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. முன்னதாக படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் படப்பிடிப்பிற்காக பயன்படுத்தப்பட்ட குதிரை ஒன்று இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் தற்போது சுமார் எட்டு குதிரைகள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதாவது பொன்னியின் செல்வன் படப்பிடிப்பிற்காக வாடகைக்கு எடுக்கப்பட்ட குதிரைகளில் 8 குதிரைகள் தட்ப வெப்பநிலை காரணமாக உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் வாடகைக்கு வாங்கப்பட்ட குதிரைகள் இறந்ததால், குதிரைகளின் உரிமையாளர்கள் தயாரிப்பு நிறுவனத்திடம் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் மணிரத்னம் செய்வதறியாமல் தவித்து வருகிறாராம்.