தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து பின்னர் ஹீரோ அவதாரம் எடுத்தவர் தான் விஜய் ஆண்டனி. ஆரம்ப காலத்தில் இவர் நடிப்பில் வெளியான சலீம், நான், எமன், சைத்தான், பிச்சைக்காரன், கொலைகாரன் மற்றும் திமிரு பிடிச்சவன் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதன் மூலம் இசையமைப்பாளராக இருந்து நடிகராக தன்னை ரசிகர்கள் மனதில் நிலை நிறுத்தினார் விஜய் ஆண்டனி.

தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி உள்ள படம் தான் கோடியில் ஒருவன். இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் ஆத்மிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா மற்றும் அர்ஜுன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

கதைப்படி கிராமத்தில் வசிக்கும் விஜய் ஆண்டனியை அவரது அம்மா கலெக்டராக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு அழைத்து வருகிறார். அங்கு ஹவுஸிங் போர்ட் பகுதியில் குடியேறும் விஜய் ஆண்டனி அந்த பகுதியின் தரத்தை உயர்த்தவும், மக்களின் நிலையை உயர்த்தவும் சில வேலைகளை செய்கிறார். அதனால் வில்லன்களால் சிக்கல்கள் உருவாக அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறார்? கலெக்டர் ஆனாரா இல்லையா என்பதுதான் கதைக்களம்.

ட்விட்டரில் கோடியில் ஒருவன் படத்திற்கு ஓரளவிற்கு நல்ல விமர்சனங்களே கிடைத்துள்ளன. பிரபல பத்திரிக்கையாளரும், திரைப்பட விமர்சகருமான ரமேஷ் பாலா இப்படத்திற்கு 5க்கு 3.5 மதிப்பெண்கள் வழங்கியுள்ளார். அதேபோல் மூடர் கூடம் பட இயக்குனர் நவீன், வாழ்த்துக்கள். பக்கா மாசா ஒரு ஹிட்டடிச்சிருக்கீங்க. பக்கா கமர்சியல் ஆக்சன் படம்  என ட்விட்டரில் கமெண்ட் செய்துள்ளார்.

மேலும் ரசிகர்களும் நல்ல விமர்சனங்களையே வழங்கி வருகிறார்கள். இயக்குனர் கிருஷ்ணன் கதைக்களம் மற்றும் நடிகர்களை கையாண்ட விதம் என அனைத்திலும் ஸ்கோர் செய்துள்ளார். ஆனால் படத்தின் வேகத்தை மட்டும் கொஞ்சம் கூட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது ஒரு சில ரசிகர்களின் கருத்தாக உள்ளது.