கூர்கா படத்தின் காப்பி தானே பீஸ்ட்.. நேருக்கு நேராக நெத்தியடி பதில் கொடுத்த பிரபலம்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் இத்திரைப்படம் விஜய் ரேஞ்சுக்கு செட்டாகவில்லை என்று ரசிகர்கள் புலம்பித் தள்ளி வருகின்றனர்.

இதனிடையே இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வந்தபோது, ஏற்கனவே நடிகர் யோகி பாபு நடித்த கூர்க்கா திரைப்படத்தைப் போலவே உள்ளது என ரசிகர்கள் நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினர். இந்த நிலையில் தற்போது கூர்கா திரைப்படத்தின் இயக்குனர் சாம் ஆன்டன் பீஸ்ட் படத்தை குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்திற்கு ஒரு மாலில் தீவிரவாதிகள் ஹைஜாக் செய்வது போன்ற கதை அம்சத்தோடு எடுக்கப்பட்டிருக்கும். தீவிரவாதிகளிடம் சிக்கி இருக்கும் பொதுமக்களை ஒரே ஆளாக நின்று காப்பாற்றும் வீரராகவன் கதாபாத்திரத்தில் தளபதி விஜய் நடித்து அசத்தியிருப்பார். இந்தநிலையில் இத்திரைப்படத்தை குறித்து இயக்குனர் சாம் ஆன்டன் தற்போது பேட்டியில் பேசியுள்ளார்.

இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த கூர்க்கா திரைப்படத்தில் நடிகர் யோகிபாபு கதாநாயகனாக நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் மால் ஒன்றை ஹைஜாக் செய்யும் தீவிரவாதிகளிடமிருந்து யோகி பாபு நகைச்சுவை கலந்த நடிப்போடு பொதுமக்களை காப்பாற்றுவார். அதே பாணியில் தற்போது விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் அமைந்துள்ளது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இதனிடையே இது குறித்து பேசிய இயக்குனர் சாம் ஆண்டன் பீஸ்ட் மிகப்பெரிய திரைப்படம், கூர்க்கா ஒரு சின்ன பட்ஜெட் திரைப்படம். மால் கதையைப் மையமாக வைத்து பல திரைப்படங்கள் ஹாலிவுட்டில் வந்துள்ளது. அதைப்போல கதையம்சத்தில் வெளிவந்த திரைப்படம் தான் கூர்கா. ஆனால் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தை பார்த்து நான் மெய் மறந்து விட்டேன். அவரது நடிப்பும் அவரது ஆக்ஷன் காட்சிகளும் பிரம்மாண்டமாக அமைந்தது என்று சாம் ஆண்டன் தெரிவித்தார்.

மேலும் விஜய் போன்ற பெரிய ஸ்டார் இப்படி ஒரு கதையில் நடிக்க வேண்டும் என்பதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும் அதை விஜய் அசால்ட்டாக செய்திருப்பார். இந்த நிலையில் பீஸ்ட் படத்தை கூர்க்கா படத்தோடு ஒப்பிடுவது சரியல்ல என்றும் கூர்க்கா திரைப்படம் ஒரு நகைச்சுவை கலந்த திரைப்படமே தவிர பீஸ்ட் படத்தின் அளவிற்கு கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் ஒரே காட்சிகளை கொண்டே வெளிவருகின்றன. உதாரணத்திற்கு அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட திரைப்படங்கள் ஒரே வீட்டில் நடக்கும் கதையாக அமையும். அதே போல பேன் இந்தியா திரைப்படமாக வெளிவந்த தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படமும் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படம் பாணியில்தான் இருந்தது. அதோடு யாரும் ஒப்பிடுவது கிடையாது . ஆனால் விஜய் போன்ற மிகப்பெரிய நடிகர் ஒரு படத்தில் நடிக்கும் போது அது குறித்து விமர்சனங்கள் எழுவது பொதுவாக நடப்பதுதான் என்று சாம் ஆன்டன் தெரிவித்தார்.