சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்த நடிகர்களில் மிகவும் முக்கியமான நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல், யாருடைய ஆதரவும் இல்லாமல் தனது சொந்த முயற்சியில் சாதித்து முன்னேறிய சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மெரினா படம் மூலமாக அறிமுகமான இவர் தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களில் பெரும்பாலும் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பதால் ரசிகர்கள் இவரது படங்களை விரும்பி பார்க்க தொடங்கினார்கள். அதேபோல் சிவகார்த்திகேயனும் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார்.

ஆரம்பத்தில் படங்களில் மட்டுமே நடித்து வந்த சிவகார்த்திகேயன் தொடர்ந்து கிடைத்த புகழ் காரணமாக சில படங்களை தயாரிக்க தொடங்கினார். அதன்படி ஒரு சில படங்களை தயாரிக்கவும் செய்தார். ஆனால் அகலக்கால் வைத்ததாலோ என்னவோ அந்த படங்கள் தோல்வி அடைந்ததால், மிகப்பெரிய கடனில் சிக்கி விட்டார்.

ஆரம்பகாலத்தில் ஒரு சமயத்தில் ஒரு படத்தில் மட்டுமே நடித்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது கடன் தொல்லை அதிகமானதை அடுத்து ஒரே சமயத்தில் பல படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். தற்போது அவர் நடிப்பில் டான், சிங்கப்பாதை மற்றும் அயலான் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்காக ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தற்போது தனுஷ், ஹிப் ஹாப் ஆதி மற்றும் சூர்யா ஆகியோரின் படங்களை வரிசையாக தயாரித்து வருகிறது. முன் அனுபவம் இல்லாமல் தயாரிப்பில் இறங்கிய சிவகார்த்திகேயன் தற்போது கடனில் சிக்கி புலம்பி வருகிறாராம்.