தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஆர்யா. ஆரம்பத்தில் ஹிட் கொடுத்து வந்த ஆர்யா இடையில் சற்று தடுமாறிய ஆர்யா சமீபகாலமாக நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான டெடி, சார்பட்டா பரம்பரை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

அதிலும் குறிப்பாக பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் மாபெரும் வெற்றி பெற்றது. பிரபலங்கள் பலரது பாராட்டையும் தட்டிச் சென்றது. இப்படம் மூலம் ஆர்யாவின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் உள்ளது. மேலும் பல புதிய பட வாய்ப்புகள் அவரை தேடி வந்த வண்ணம் உள்ளன.

அந்த வரிசையில் தற்போது ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளது. அதில் ஒரு படம் தான் எனிமி. விஷால் மற்றும் ஆர்யா இரண்டாவது முறையாக இணைந்துள்ள இப்படத்தை இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷால், ஆர்யா தவிர பிரகாஷ்ராஜ், மிருணாளினி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தற்போது எனிமி படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு வரும் அக்டோபர் 14ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் மற்றொரு படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

காரணம் அதே நாளில் தான் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை 3 படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, சுந்தர்.சி, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் அரண்மனை 3. நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

எனவே இப்படத்தை அக்டோபர் 14ஆம் தேதி வெளியிடலாம் என படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தான் எனிமி படக்குழுவினர் முந்தி கொண்டனர். இருப்பினும் அந்த தேதியை விட்டால் வேறு தேதி கிடைக்காது என்பதால் அதே தேதியில் அரண்மனை படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனராம். இதனால் ஒரே நாளில் ஆர்யாவின் இரண்டு படங்கள் வெளியாக உள்ளது.