ஒரே சமயத்தில் சூர்யாவின் 2 படங்களை தயாரிக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனங்கள்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யா ஒருபுறம் படங்களில் நடிப்பது, மற்றொருபுறம் படங்களை தயாரிப்பது என மிகவும் பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் உருவாகியுள்ள நான்கு படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அதே போல் இவர் கைவசம் ஏராளமான படங்களில் நடித்தும் வருகிறார்.

அதன்படி சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் எதற்கும் துணிந்தவன் படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாகவும் செய்திகள் கசிந்து வருகிறது.

முன்னதாக எதற்கும் துணிந்தவன் படத்தை முடித்த பின்னர் நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது வெற்றிமாறன் சூரியை மையமாக வைத்து உருவாக்கி வரும் விடுதலை படத்தில் பிசியாக இருப்பதால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி சென்றுள்ளது. இதற்கிடையில் சூர்யா நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம்.

இயக்குனர் ரவிக்குமார் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தை இயக்கியுள்ளார். அயலான் படத்தை போலவே சூர்யா – ரவிக்குமார் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படமும் சையின்ஸ் ஃபிக்சன் படமாம். இப்படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.

இதேபோல் சூரரைப்போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக சுதா கொங்கரா மற்றும் சூர்யா கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஒரே சமயத்தில் சூர்யாவின் இரண்டு படங்களை பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

AllEscort