ஏஜிஎஸ் நிறுவனத்தால் வடிவேலுக்கு வந்த பெரும் சோதனை.. ஒரு அடி எடுத்து வச்சா ரெண்டு அடி சறுக்குது

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த வடிவேலு தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளை பேசி முடித்து மீண்டும் வடிவேலு படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

ஆனால் தற்போது மீண்டும் அவருக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதாவது வடிவேலு ஹீரோவாக களமிறங்கும் புதிய படத்திற்கு நாய் சேகர் என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்க, படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தான் நாய் சேகர் என்ற தலைப்பிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதே தலைப்பை ஏற்கனவே ஏஜிஎஸ் நிறுவனம் பதிவு செய்து வைத்துள்ளார்களாம். எனவே அவர்கள் இந்த தலைப்பை லைகா நிறுவனத்திற்கு விட்டுக்கொடுக்க மறுத்து வருகின்றனர்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் நாய் சேகர் படத்தில் காமெடி நடிகர் சதீஷ் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாய் சேகர் என்ற தலைப்பு வடிவேலுக்கு மட்டுமே பொருத்தமாக இருக்கும் என்பதால் வடிவேலு தரப்பிலிருந்து ஏஜிஎஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

ஆனால் அதிலும் உடன்பாடு ஏற்படாததால், வடிவேலு புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதன்படி படத்திற்கு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற தலைப்பை வைக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் இப்படத்தின் கதைக்கு நாய் சேகர் என்ற தலைப்பு தேவைப்படுவதாலே நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளதாக படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஏஜிஎஸ் நிறுவனம் வடிவேலுக்காக இந்த தலைப்பை விட்டுக்கொடுத்திருக்கலாம் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.