இனிமையான குரலுக்கு சொந்தக்காரரான எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் திரைப்பட பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரும் ஆவார். இவர் எஸ்.பி.பி என்றே மக்களால் அறியப்பட்டார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாள திரைப்படங்களில் இவர் பாடல்கள் பாடியுள்ளார். 1966 ஆம் ஆண்டு முதல் பாடல்களைப் பாடத் தொடங்கிய இவர் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை 16 மொழிகளில் பாடியுள்ளார். இவர் கேளடி கண்மணி, அமர்க்களம் போன்ற திரைப்படங்களில் மூச்சுவிடாமல் பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.

அனைத்து மொழிகளிலும் சிறந்த பாடகருக்கான பல விருதுகளை பெற்ற இவர் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

மேலும் இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளை வழங்கி கௌரவப்படுத்தியது. தமிழக, கர்நாடக அரசின் மாநில விருதுகளையும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றுள்ளார்.

பல சாதனைகளைப் புரிந்த இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 25 அன்று கோவிட் தொற்று காரணமாக மரணமடைந்தார். இது ரசிகர்களையும் பொதுமக்களையும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இன்று அவருடைய முதலாம் ஆண்டு இறந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

அவருடைய மகனும் பாடகருமான எஸ்.பி.பி சரண் காவல்துறையின் அனுமதி கிடைக்காததால் பொதுமக்கள் தன் அப்பாவின் சமாதிக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.