தனது வித்தியாசமான கதைகள் மூலம் தமிழ் சினிமாவில் தனிப்பட்ட படங்களை வழங்கிய இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் என்றால் அது இயக்குனர் மிஷ்கின் மட்டுமே. அந்த வகையில் இவரது இயக்கத்தில் வெளியான சைக்கோ, பிசாசு, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் உள்ளிட்ட படங்கள் மிகவும் வித்தியாசமாகவும், முற்றிலும் மாறுபட்டும் இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவரது படங்கள் வரவேற்பு பெறுவது மட்டுமல்லாமல், விமர்சன ரீதியாக நல்ல பெயரை பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் கிட்டத்தட்ட முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. முன்னதாக மிஷ்கின் இயக்கத்தில் இறுதியாக வெளியான துப்பறிவாளன் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தில் நடிகர் விஷால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் மிஷ்கின் இறங்கினார்.

அந்த சமயத்தில் மிஷ்கின் மற்றும் விஷால் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மிஷ்கின் அப்படத்தில் இருந்து விலக தற்போது விஷாலே அப்படத்தை இயக்கி நடிக்க முடிவு செய்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மிஷ்கின் விஷால் குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “விஷால் எனக்கு தம்பி மாதிரி. அந்த கோபம் நிஜம். அவன் நல்லா இருக்கணும். ஆனால், அவனுடன் இனிமேல் கலைப்பயணம் இல்லை. துப்பறிவாளன் படத்தில் பாட்டு வேண்டாம் என சொன்னதுக்கு சரின்னு சொன்ன பெரிய மனுஷன் அவன். நாங்க இரண்டு பேரும் விடாக்கண்டன் கொடாக்கண்டன்கள்.

அப்படித்தான் இருக்கும். அவன் 40 வருஷம் சினிமாவில் இருப்பான். நல்ல உழைப்பாளி. அவன் என்மேல் வைத்த அன்பையும், நான் அவன் மேல் வைத்த அன்பையும் மறக்க முடியாது” என கூறியுள்ளார். விஷால் குறித்து மிஷ்கின் முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.