சன் பிக்சர்ஸ் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் தீபாவளி அன்று வெளியான திரைப்படம் அண்ணாத்த. விசுவாசம் திரைப்படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் சிறுத்தை சிவாவின் முந்தைய படங்களின் சாயல் இருக்கிறது என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். பல கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்த் இந்த படத்தை பற்றி சில விஷயங்களை தொலைபேசியின் மூலம் நம்மிடையே பகிர்ந்துள்ளார். அதாவது இந்தப் படத்தின் முதல் சிங்கிள் வெளியான போது தன் மூன்றாவது பேரன் வேத், படத்தை எப்பொழுது பார்க்கலாம் என்று என்னிடம் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தான்.

அவன் தொல்லை தாங்காமல் நான் இயக்குனரிடம் சீக்கிரம் படத்தை அவனுக்கு காட்டுங்கள் என்று கூறினேன். பின்னர் படம் ரெடியான உடனே சன் பிக்சர்ஸ் சார்பில் எங்களுக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டது.

அதைப்பார்த்த என் பேரன் மிகவும் சந்தோஷத்துடன் என்னை கட்டிப்பிடித்துக் கொண்டான். இந்தப் படம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதுமட்டுமில்லாமல் சிறுத்தை சிவா என்னிடம் படத்தின் கதையை கூறிய பொழுது கிளைமாக்ஸ் காட்சியில் என்னையறியாமல் நான் அழுதுவிட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் சிறுத்தை சிவா இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் அதிலும் பெண்கள் அனைவரும் உங்கள் படத்தை நிச்சயம்  விரும்புவார்கள் என்று என்னிடம் கூறினார். அவர் சொன்னது போலவே இப்பொழுது படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சொல்லி அடிச்சாரு சிவா என்று அண்ணாத்த படத்தை பற்றி சூப்பர் ஸ்டார் பெருமையாக கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் அவர் நடித்த எந்த படத்தைப் பற்றியும் இந்த அளவு கூறியது இல்லை. ஆனால் அண்ணாத்த திரைப்படத்திற்காக அவர் இவ்வாறு வாய்ஸ் ஓவர் பிரமோஷன் செய்துள்ளார். இதுவும் படத்தின் வசூலை அதிகரிக்க செய்யும் ஒரு செயலே என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.