உதயநிதிக்காக பிரபல வாரிசு நடிகரை ஓரம்கட்டிய மாரி செல்வராஜ்.. அதிரடியாக வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து பின்னர் நடிகராக மாறியவர்தான் நடிகர் உதயநிதி ஸ்டாலின். இவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் ஓரளவிற்கு நல்ல பெயரை பெற்று தந்தன. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின், பிசியான அரசியல்வாதியாகவும் திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் உதயநிதிக்காக இயக்குனர் மாரி செல்வராஜ் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் மாரி செல்வராஜ். இவரது முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், வேதனையையும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறிய பரியேறும் பெருமாள் படம் பல விருதுகளையும் குவித்தது.

இதனை அடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷை வைத்து மாரி செல்வராஜ் அவரது இரண்டாவது படமான கர்ணன் படத்தை இயக்கியிருந்தார். இப்படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதன் மூலம் தற்போது முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் மாரி செல்வராஜ்.

கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிப்பில், பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஒரு புதிய படத்தை மாரி செல்வராஜ் இயக்குவதாக இருந்தது. ஆனால் தற்போது உதயநிதிக்காக அந்த படத்தை தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது உதயநிதிக்காக, மாரி செல்வராஜ் ஒரு படம் செய்ய உள்ளாராம், அதற்காக துருவ் விக்ரம் படத்தை தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

உதயநிதி தற்போது கே.எஸ்.அதியமான் இயக்கத்திலும், ஆர்டிகிள் 15 என்ற ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடித்து வருகிறார். சமீபகாலமாக உதயநிதி நடிப்பை தாண்டி அரசியலில் அதிக கவனம் செலுத்தி வருவதால், தற்காலிகமாக நடிப்புக்கு குட் பாய் சொல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அநேகமாக மாரி செல்வராஜின் படத்துடன் நடிப்பை கைவிட அவர் திட்டமிட்டுள்ளார் என தெரிகிறது.