அஜித் விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என பல நடிகர்கள் ஏங்கி வருகின்றனர். இந்நிலையில் அஜித் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகர் வாய்ப்பு பறிபோனது குறித்து டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் அஜித் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

சமீபத்தில் வலிமை படத்தின் புகைப்படங்கள் மற்றும் கிளிம்ப்ஸ் காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. அதே சமயம் படத்தின் இயக்குனர் வினோத்தும் பேட்டி ஒன்றில் படம் குறித்த பல்வேறு சுவாரசியமான தகவல்களை கூறியிருந்தார்.

அந்த பேட்டியில் வினோத் கூறியதாவது, “வலிமை படத்தின் கதையை கேட்ட அஜித் வில்லன் கதாபாத்திரத்திற்கு நடிகர் பிரசன்னா அல்லது அர்ஜுன் தாஸ் பொருத்தமாக இருப்பதாக சொன்னார்” என குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அந்த வாய்ப்பு கைநழுவி தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவிற்கு சென்றது.

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் பிரசன்னா அவரது ட்விட்டர் பதிவில், “எனது அன்புக்குரிய தல என் மீது நம்பிக்கை வைத்துள்ளார் என்பதில் பெருமகிழ்ச்சி. வலிமை வாய்ப்பு கை நழுவியதில் ஏமாற்றம்தான் என்றாலும் கூட பெரிய விஷயங்கள் என்னை சேரும் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.