பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் இந்தியன். இப்படம் 1996 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம். தமிழ் திரையுலகில் அதிக வசூலை வாரி குவித்த பாட்ஷா திரைப்படத்தின் வசூலை இப்படம் முறியடித்தது.

இந்தப் படம் சிறந்த நடிகருக்கான விருது உட்பட மூன்று தேசிய விருதுகளை பெற்று சாதனை படைத்தது. கமல் இந்த படத்தில் ஊழலுக்கு எதிராக போராடும் வயதான தந்தை மற்றும் ஊழல் செய்யும் மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

மேலும் இயக்குனர் இப் படத்தில் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளை மிகவும் தத்ரூபமாக காட்டியிருப்பார். இப்படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் கழித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை ராஜ் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியிருந்தது.

மிகப்பெரும் சாதனை பெற்ற இந்த படத்துக்கு அப்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது. அதனால் இந்தப் படம் ஒளிபரப்பான பொழுது விளம்பரங்கள் அதிக நேரம் ஒளிபரப்பப்பட்டது.

மேலும் இடையே செய்திகளும் ஒளிபரப்பானதால் இந்தப் படம் தொலைக்காட்சியில் 8 மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதாவது மாலை 4 மணிக்கு ஆரம்பித்த படம் நள்ளிரவு 12 மணிக்கு தான் முடிந்ததாம்.

3.15 மணி நேரம் கொண்ட இத் திரைப்படம் 8 மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்பட்டு தொலைக்காட்சி வரலாற்றில் சாதனை படைத்தது. இந்த சாதனையை இதுவரை எந்த திரைப்படமும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது.