ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன், சுகன்யா, மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, செந்தில், கஸ்தூரி ஆகியோரின் நடிப்பில் 1996 இல் வெளியான திரைப்படம் இந்தியன். இப்படத்தை ஏ எம் ரத்னம் தயாரித்து இருந்தார். ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்தியன் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். இந்தியன் 2 படத்தில் கமலஹாசன், காஜல் அகர்வால் நடித்து வந்தார்கள். படப்பிடிப்பின்போது செட்டில் கிரேன் விழுந்து 3 பேர் பலியானார்கள். இதனால் இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு கமல் மற்றும் சங்கர் இருவரும் அவரவர் படங்களில் பிஸியாக இருந்தார்கள்.

இந்தியன் 2 திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வந்தது. படத்தின் படப்பிடிப்பு தாமதமானதால் இயக்குனர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. பின்பு இருவரும் சமாதானமாக செல்லலாம் எனக் கூறிய பிறகு வழக்கு முடிவுக்கு வந்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் விக்ரம் படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அதேபோல் ஷங்கர் தெலுங்கில் இயக்கி வரும் ராம்சரண் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவுள்ளது.இதனால் டிசம்பர் மாதத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.

தற்போது காஜல்அகர்வால் கர்ப்பமாக உள்ள காரணத்தினால் இப்படத்தில் இருந்து விலகிவிட்டார். காஜல் அகர்வால் கதாபாத்திரத்தில் தற்போது நடிக்க சமந்தா மற்றும் திரிஷா உடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

கமலுடன் திரிஷா ஏற்கனவே மன்மத அம்பு, தூங்கா வனம் ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார். கமலுடன் 3வது முறையாக திரிஷா இணைவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்தியன் 2 படத்தில் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் மீதமுள்ள 20 சதவீத சூட்டிங் ஒரே மூச்சாக எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்தியன் 2 படத்தில் நடித்த விவேக் மற்றும் நெடுமுடிவேணு தற்போது இல்லாத நிலையில் காஜல் அகர்வாலும் இப்படத்திலிருந்து விலகியதால் ஸ்கிரிப்டில் சில மாற்றங்கள் செய்யப்படலாம். பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்தியன் 2 படம் மீண்டும் சூட்டிங் ஆரம்பிப்பதால் கமல் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.