ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த தற்போதைய காமெடி சூப்பர் ஸ்டார்.. அப்போ காமெடிக்கு பஞ்சம் இருக்காது

ரேடியோ ஜாக்கியாக இருந்து தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. பல படங்களில் காமெடியனாக நடித்துள்ள பாலாஜி சமீப காலமாக ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான எல்.கே.ஜி. மற்றும் மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவ்விரு படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஹிந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆர்.ஜே.பாலாஜி நடித்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் கொரோனா நடிப்பில் வெளியான பதாய் ஹோ படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் ஆர்.ஜே.பாலாஜி நடித்து வருகிறார். வெறும் 29 கோடி ரூபாய் செலவில் முழுநீள காமெடி படமாக வெளியான இப்படம், சுமார் 220 கோடி வரை வசூல் சாதனை படைத்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.

ஹிந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தை தமிழில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்து வருகிறார். மேலும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர் இப்படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக சூரரைப்போற்று படம் மூலம் பிரபலமான நடிகை அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இப்படத்திற்கு வீட்ல விசேஷங்க என தலைப்பு வைத்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கோயம்புத்தூர் பகுதிகளில் தொடங்கி உள்ளதாகவும், தொடர்ந்து 45 நாட்களில் ஒரே கட்டமாக படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகி பாபு சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த தகவலை யோகி பாபுவே அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “ஆர்.ஜே.பாலாஜி படத்தில் கெளரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்” என்று புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் என்றால் அது யோகி பாபு மட்டுமே. எனவே ஆர்.ஜே.பாலாஜியுடன், யோகி பாபு இணைந்துள்ளதால் படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.