80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சத்யராஜ். சட்டம் என் கையில் எனும் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சத்தியராஜ் ஆரம்ப காலங்களில் வில்லனாகவே அதிக படங்களில் நடித்துள்ளார். அதன் பின்னரே அவருக்கு ஹீரோ வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் வில்லன் வேடங்களில் தான் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

தற்போது நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் வலம் வரும் சத்யராஜ் இன்றுவரை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஹீரோவாக நடிக்கா விட்டாலும், குணச்சித்திர வேடங்களில் நடித்து அனைவரது பாராட்டையும் தட்டிச் சென்று வருகிறார்.

இந்திய அளவில் பிரபலமான பாகுபலி படத்தில் கட்டப்பா எனும் கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடித்து பலரது கவனத்தையும் அவர் பக்கம் திருப்பியிருந்தார். உண்மையில் கட்டப்பா கதாபாத்திரத்திற்கு சத்யராஜை விட வேறு எந்த ஒரு நடிகரும் பொருத்தமாக இருந்திருக்க மாட்டார். அந்த அளவிற்கு தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து கொடுத்திருந்தார்.

கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட சத்யராஜின் படங்களில் கோயம்புத்தூர் குசும்பு சற்று அதிகமாகவே இருக்கும். அவரது பேச்சிலும் கோயம்புத்தூர் வாசம் வீசும். இந்த வயதிலும் தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரங்களை தத்ரூபமாக நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வரும் சத்யராஜ் ஆரம்ப காலத்தில் எவ்வளவு சம்பளம் வாங்கி வந்தார் என்பதை அவரே கூறியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சத்யராஜ், “நான் ஆரம்ப காலத்தில் வாங்கிய அதிகபட்ச சம்பளமே 500 முதல் 1000 ரூபாய் தான். முதன் முதலில் எனக்கு அதிகபட்சமாக 4000 ரூபாய் சம்பளம் வழங்கியவர் டி.ஆர். மட்டும் தான். தங்கைக்கோர் கீதம் படத்திற்காக எனக்கு அதிக சம்பளம் வழங்கினார்” என கூறியுள்ளார். கட்டப்பா ஆரம்ப காலத்தில் இவ்வளவு குறைவான சம்பளத்திற்கு நடித்துள்ளாரா என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.