அருண் விஜய், சூர்யா கூட்டணியில் வெளிவந்த ஓ மை டாக் படம் எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

விஜயகுமார், அருண் விஜய், அர்ணவ் விஜய் போன்ற மூன்று தலைமுறைகள் ஒன்று சேர்ந்து நடித்திருக்கும் திரைப்படம் ஓ மை டாக். இப்படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் சார்பாக நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இந்த கூட்டணியில் வினய், மகிமா நம்பியார் உள்ளிட்ட பலரும் நடித்து இருக்கின்றனர்.

அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம் தற்போது ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்துள்ளது. குழந்தைகளை கவரும் வகையில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் தற்போது நாய் பிரியர்களையும், குடும்ப ஆடியன்ஸ்களையும் கவர்ந்துள்ளது.

குட்டி நாயகனாக களமிறங்கியிருக்கும் அருண் விஜய்யின் மகன் இந்தப் படத்தின் மூலம் கவனிக்கப்படும் குழந்தை நட்சத்திரமாக மாறுவார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். படத்தில் அவர் நாய்க்குட்டி உடன் அடிக்கும் லூட்டியும், அதைப்பார்த்து கடுப்பாகும் அருண் விஜய்யின் நடிப்பும் மிகவும் எதார்த்தமாக உள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

மேலும் விஜயகுமார், மகிமா நம்பியார், வினய் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கின்றனர். சமீபகாலமாக குடும்பங்களையும் குழந்தைகளையும் கவரும் வகையில் திரைப்படங்களை தயாரித்து வரும் சூர்யா இந்தப் படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை கவர்ந்துள்ளதாக அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் நாய்கள் சம்பந்தப்பட்ட பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் இந்த திரைப்படம் மிகவும் வித்தியாசமாகவும் ரசிக்கும்படி இருப்பதாகவும் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். கலர்ஃபுல்லான காட்சிகளும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதால் இப்படம் தற்போது ரசிகர்களை அதிக அளவில் ஈர்த்துள்ளது.

அந்த வகையில் இந்த திரைப்படம் குழந்தைகள் மிகவும் விரும்பி பார்க்க கூடிய தரமான படம் என்று பல பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. சூர்யாவின் தயாரிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற பசங்க 2 படவரிசையில் இந்த திரைப்படமும் தற்போது இணைந்துள்ளது.