தமிழ் சினிமாவில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று படம் மூலமாக நாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இப்படத்தில் இவரது எதார்த்தமான நடிப்பு பலரது பாராட்டையும் பெற்றது. முன்னதாக பல படங்களில் கூட்டத்தில் ஒருவனாகவும், சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடித்து வந்த விஜய் சேதுபதி இப்படம் மூலமாக ரசிகர்களின் கவனம் பெற்றார்.

தென்மேற்கு பருவக்காற்று படம் தேசிய விருதை பெற்றிருந்த போதும் விஜய் சேதுபதிக்கான அங்கீகாரம் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின்னரே பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சூது கவ்வும் என அடுத்தடுத்து ஏராளமான படங்களில் ஒப்பந்தமானார். அதேபோல் இந்த படங்களும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றன.

தொடர்ந்து வெற்றி படங்களாக வழங்கி வந்த விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார். அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. எதார்த்தமான நடிப்பு மற்றும் பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம் காரணமாக பலரும் விஜய் சேதுபதியை விரும்ப தொடங்கினார்கள். ரசிகர்கள் அவரை செல்லமாக மக்கள் செல்வன் எனவும் அழைத்து வந்தனர்.

விஜய் சேதுபதி படம் என்றாலே நிச்சயம் நன்றாக இருக்கும். தியேட்டருக்கு சென்ற திருப்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் திரையரங்கிற்கு செல்ல தொடங்கினார்கள். அதே போல் விஜய் சேதுபதியும் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார். ஆனால் சமீபகாலமாக அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.

மிகவும் குறுகிய காலத்தில் அதிக படங்கள் நடித்தவர் என்ற பெருமை இருந்தாலும் தொடர் தோல்வியை வழங்கி வருகிறார். கால்ஷீட் டைரி நிரம்பி வழியும் அளவிற்கு படங்களில் ஒப்பந்தமாகும் விஜய் சேதுபதி எண்ணிக்கையை மட்டும் பார்க்கிறாரே தவிர ஏனோ படங்களின் தரத்தை பார்க்க மறந்து விடுகிறார். அதன் விளைவு தற்போது அவர் நடிப்பில் வெளியான லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி ஆகிய 3 படங்களும் தொடர் தோல்வியை சந்தித்துள்ளன. இனியாவது எண்ணிக்கையை பார்க்காமல் கதையின் தரத்தை பாருங்கள் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.