அண்ணாத்த போஸ்டரில் அருவருப்பான செயல் செய்த ரசிகர்.. வன்மையாக கண்டித்த சம்பவம்.!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்தின் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் தற்போது ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இப்படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையரங்கிற்கு சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனவே தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரஜினியை திரையரங்கில் பார்க்கும் மகிழ்ச்சியில் ரசிகர்கள் உள்ளனர்.

மேலும் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் ரஜினி தவிர நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்கள் நடித்துள்ளதால் படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் மேலும் அதிகரித்துள்ளது. படம் குறித்த அனைத்து பணிகளும் முடிவடைந்து வரும் தீபாவளி அன்று நவம்பர் 4ஆம் தேதி படம் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியை மையமாக கொண்டு உருவாகி உள்ளது என்பது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் தெரிகிறது.

இந்நிலையில் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன் மீது சிலர் ஆடு வெட்டி ரத்த அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை கண்டித்து அகில இந்திய ரஜினிகாந்த் சங்க மன்றம் சுற்றறிக்கையை விடுத்துள்ளது.

அதில், ‘ஆடுவெட்டி போஸ்டரில் அபிஷேகம் செய்யும் செயலை வன்மையாக கண்டிப்பது மட்டுமில்லாமல் அது மிகவும் வருந்தத்தக்க செயல். ஆகையால் இத்தகைய அருவருப்பான செயலில் ஈடுபட வேண்டாம்’ என்று அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி விஎம் சுதாகர் கேட்டுக்கொண்டுள்ளார்.