அண்ணாத்த படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? பாக்ஸ் ஆபிசில் மிரட்டும் ரஜினி

சினிமாவை பொருத்தவரை பெரிய நடிகர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் முதல் நாளே வசூல் சாதனை படைத்து வருவது சாதாரண விஷயம் தான். இருப்பினும் தற்போது வரை தமிழ் சினிமாவில் வசூல் மன்னன் என்றால் அது தளபதி விஜய் தான். சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே முதல் நாள் நல்ல வசூலை பெற்று தந்து லாபம் பார்த்தது.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினியின் அண்ணாத்த படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படம் தீபாவளி விருந்தாக நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

படம் வெளியாவதற்கு முன்பே படத்திற்கான டிக்கெட் முன்பதிவு சில மணி நேரத்திலேயே ஃபுல்லானது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரஜினியை தியேட்டரில் பார்க்கும் மகிழ்ச்சியில் ரஜினி ரசிகர்கள் தியேட்டரை நோக்கி படையெடுத்தனர். தற்போது அண்ணாத்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி அண்ணாத்த படம் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ. 34.92 கோடி வசூல் செய்துள்ளதாம். இதுவரை தமிழ் சினிமாவில் எந்த ஒரு படமும் முதல் நாள் இவ்வளவு பெரிய தொகையை வசூல் செய்தது இல்லையாம். மேலும் ஆஸ்திரேலியாவில் மட்டும் ரூ. 63 லட்சம் வரை அண்ணாத்த படம் வசூல் செய்துள்ளது.

என்னதான் அண்ணாத்த படம் விமர்சன ரீதியாக பல எதிர்மறை விமர்சனங்களை சந்தித்திருந்தாலும், வியாபார ரீதியாக தியேட்டர் உரிமையாளர்களுக்கு லாபத்தையே பெற்று தந்துள்ளது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.