அடுத்தடுத்து 4 மாஸ் ஹீரோக்களுடன் கமிட்டான கிங்ஸ்லி.. அடேங்கப்பா! இனி அசுர வளர்ச்சிதான்

இளம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் டாக்டர். இப்படத்தின் நாயகனாக வேண்டுமானால் சிவகார்த்திகேயன் இருக்கலாம். ஆனால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் என்றால் அது காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி தான்.

டாக்டர் படத்தில் யோகி பாபு, குக் வித் கோமாளி தீபா என பல பிரபலங்கள் நடித்திருந்தாலும், படம் முழுக்க ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த நபர் என்றால் அது ரெடின் கிங்ஸ்லி தான். படம் பார்த்த அனைவருமே இவரின் நடிப்பை தான் பாராட்டி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் தற்போது யோகி பாபு மட்டுமே காமெடி கிங்காக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் டாக்டர் படத்தில் யோகி பாபுவையே ரெடின் கிங்ஸ்லி ஓவர் டேக் செய்துவிட்டாராம். படத்தில் யோகி பாபுவை விட ரெடின் கிங்ஸ்லியின் காமெடி தான் திரையரங்குகளில் சிரிப்பலை எழுவதற்கு காரணமாக இருந்ததாம்.

தற்போது இவர் தமிழ் சினிமாவில் சத்தம் இல்லாமல் வளர்ந்து வரும் காமெடி நடிகராக உள்ளார் என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் இவரது நடிப்பில் அடுத்தடுத்து 4 படங்கள் வெளியாக உள்ளதும். அதில் இரண்டு படங்கள் பிரம்மாண்ட ஹீரோக்களின் படங்களாகும்.

அந்த வரிசையில் டாக்டர் படத்தை தொடர்ந்து ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் வெளியாக உள்ள படம் என்றால், அண்ணாத்த படம் தான். சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இதில் ரெடின் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

இதனை தொடர்ந்து நெல்சன் – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள பீஸ்ட், மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள இடியட், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல ஆகிய படங்களில் ரெடின் தான் காமெடியனாக நடித்துள்ளாராம். இந்த படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இனி ரெடின் தான் கோலிவுட்டில் டாப் காமெடியனாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.