அஜித்துடன் மறக்க முடியாத அந்த அனுபவம்.. மனம் திறக்கும் எஃப் ஐ ஆர் பட இயக்குனர்

நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய வி வி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடித்துள்ள திரைப்படம் எஃப் ஐ ஆர். இந்த படத்தின் மூலம் உதவி இயக்குனராக இருந்த மனு ஆனந்த் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

இந்து முஸ்லிம், தீவிரவாதம் பற்றிய இந்த படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபேக்கா மோனிகா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வரும் 11 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தை பற்றி இயக்குனர் மனு ஆனந்த் ஊடகங்களுக்கு சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இந்தப் படத்தின் கதை விஷ்ணு விஷாலுக்கு மிகவும் பிடித்திருந்த காரணத்தால் தான் அவர் இந்த படத்தை தயாரித்து, நடிக்க முடிவு செய்தார் என்று கூறியுள்ளார். மேலும் அவர் நடிகர் அஜித்தை பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவலையும் பகிர்ந்துள்ளார். அவர் கௌதம் வாசுதேவ மேனனிடம் உதவி இயக்குனராக எட்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

அப்போது அவரின் இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்திலும் அவர் பணிபுரிந்துள்ளார். அந்த சமயத்தில் அஜித் அவருக்கு சினிமா தொடர்பான பல விஷயங்களை கூறுவாராம். மேலும் நல்ல கதையை வைத்து ஒரு படத்தை டைரக்ட் செய்யுங்கள்.

சினிமாவில் உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று அவரை ஊக்கப்படுத்தும் விதத்தில் நிறைய விஷயங்களை கூறுவாராம். அஜித் அப்போது கூறிய பல தகவல்களும் தற்போது தனக்கு மிகவும் உபயோகமாக இருப்பதாகவும், அஜித்துடன் பணியாற்றிய அந்த நாட்களை என்னால் நிச்சயம் மறக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

நீங்கள் அஜித்தை வைத்து படம் இயக்குவீர்களா என்ற கேள்விக்கு அவர், நான் அதைப் பற்றி இன்னும் யோசிக்கவில்லை, அஜித் சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு, அவரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அது என்னுடைய வாழ்வின் முக்கியமான தருணமாக இருக்கும். அவரை வைத்து படம் இயக்குவது என்னுடைய பாக்கியம் என்று கூறியுள்ளார்.